Thottal Thodarum

Feb 19, 2024

சாப்பாட்டுக்கடை - பசும்பொன்

 இந்த பெயரில் ஒரு க்ளவுட் கிச்சனை ஏற்கனவே ஆன்லைனில் பார்த்திருக்கிறேன். நண்பர் கார்த்திகேயன் வந்து பாருங்க என்று கூப்பிட்ட போது கடையின் பெயர் பசும்பொன் என்றிருக்க, அதே தான் இப்ப ரெஸ்ட்டாரண்டாய் மாற்றியிருக்கிறோம் என்று சொன்னார். நல்ல ஆம்பியன்ஸோடு இருந்தது உணவகம். 


ஸ்டார்ட்டரா என்னன்னா வச்சிருக்கீங்க? என்று கேட்ட மாத்திரத்தில் ஒரு பெரிய லிஸ்டைச் சொன்னார். காரப் பொடி சிக்கன், பச்சை மிளகாய் சிக்கன், நெய் சிக்கன், தொடைக்கறி போண்டா, மட்டன் நல்லி எலும்பு ரோஸ்ட், நெய் மட்டன் என வரிசைக்கட்ட, நண்பர்கள் நான்கைந்து பேரோடு போனதால் எல்லாத்துலேயும் ஒண்ணொண்ணு என்று ஆர்டர் செய்தோம்.  காரப் பொடி சிக்கன் முதலில் வந்தது. நன்கு வெந்த போன்லெஸ் சிக்கனை லேசாய் வறுத்தெடுத்து, அதில் மசாலாவைப் போட்டு, அதில் காரப் பொடியை மேலே தூவி கலந்து தருகிறார்கள். முதல் பீஸை வாயில் வைத்த மாத்திரத்தில் கிட்டத்தட்ட கரைந்தது என்றே சொல்ல வேண்டும். மேலே தூவப்பட்ட முந்திரி, திகட்டாத மசாலா, அதில் தூவப்பட்டிருக்கும் லேசான நரநர காரப் பொடி எல்லாம் சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே அலாதி. அட்டகாசமாய் இருந்தது. முதல் பாலியேயே சிக்சர். 

சரி அடுத்த பாலாய் வந்த பச்சை மிளகாய் சிக்கனை எதிர் கொள்ள தயாரானோம். பச்சை மிளகாய் சிக்கன் என்றதும் நண்பர்கள் வேண்டாம் ஏதாச்சும் வயித்தை கலக்கிறப் போவுது என்றார்கள். இருந்தாலும் தைரியமாய் முதல் பீஸை எடுத்து வாயில் வைத்தேன். அட்டகாசம். டிவைன் என்றால் இது என்று உங்களுக்கு புரிய முதல் வாய் சிக்கனை சாப்பிட்டால் தான் புரியும். பச்சை மிளகாயை பொரித்து அதை அரைத்து மசாலாவை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். வெங்காயமும் அதில் அரைப்பட்டிருக்க, நன்கு மேரினேட் செய்யப்பட்டிருக்க, அதிக காரமில்லாமல் அதோடு வரும் மசாலாவை மட்டுமே சும்மா வழித்து வழித்து சாப்பிட வைத்தது. டோண்ட் மிஸ். 

அடுத்து வந்தது நெய் சிக்கன். அட அட அட.. திகட்டாத நெய்யில் சிக்கன் மசாலாவோடு வந்தது. ஆஸ்யூஷுவல் இதன் மசாலாவும், முந்திரியும் சேர்த்து சாப்பிட வாயில் கரைந்தது என்பது டெம்ப்ளெட் வரிகளாய் இருக்கும். 

நெக்ஸ்ட் அயிட்டம் தொடைக்கறி போண்டா. குட்டி டென்னிஸ் பால் அளவிற்கு வந்திருந்தது. நான்கே நான்கு பீஸுகளுடன். கோலா உருண்டைப் போல இருந்தது. ஆனால் டேஸ்ட் கோலா உருண்டைக்கு அடுத்த பதத்தில் நன்கு அரைக்கப்பட்ட சிக்கன் தொடைக்கறியுடன் அரைக்கப்பட்ட பருப்புடன் செம்ம பதத்தில் அருமையான ஸ்டார்ட்டர்.


மட்டன் நெய்யும், நல்லி எலும்பும், சிக்கன் கொடுத்த சிறப்பை அளிக்காவிட்டாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றே தோன்றியது. சிக்கன் ப்ரை என ஒரு லெக் பீஸை பொரித்துக் கொடுத்திருந்தார்கள். நல்ல ஜூஸியாய் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கன். கார்னுடன், மசாலாவும் ஊறியிருக்க செம்மையாய் இருந்தது. 

மெயின் கோர்ஸில் பன் பரோட்டாவும், பொரித்த பரோட்டாவும் வைத்தார்கள். பன் பரோட்டாவுக்கு தனி சால்னா, பொரித்த பரோட்டாவுக்கு தனி சால்னா. பொரித்த பரோட்டா சால்னா நல்ல காரமாகவும், பன் பரோட்டாவுக்கு ஊற்றப்பட்டது டிபிக்கல் சால்னாவாக கெட்டியாகவும் இருந்தது சுவையை அதிகப்படுத்தியது. நெய் ரோஸ்டுக்கு எல்லா ஸ்டார்டர்ஸ் தொக்குகளும் செம்மையாய் சூட் ஆனது. அதில் ராஜா நெய் சிக்கன் தொக்கு.  இதையெல்லாம் விட சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால் தோசையானாலும் சரி, பரோட்டாவானாலும் சரி உடன் ஒரு வெங்காயம், தக்காளி அரைத்த தொக்கு ஒன்று தருகிறார்கள். அது செம்ம.

இவர்களின் மெயின் கோர்ஸ் வித்யாசமாய் இருந்தது. அதிலும் மதிய நேர லிஸ்ட். மட்டன் சாப்பாடு, சிக்கன் சாப்பாடு, மீன் சாப்பாடு இதில் என்னடா வித்யாசம் என்று கேட்பீர்கள். அவர்கள் அதில் தரும் மெனுதான். மட்டன் சாப்பாட்டுக்கு மட்டன் கறியோடு, மட்டன் கெட்டிக் குழம்பு, மட்டன் தண்ணிக் குழம்பு, மட்டன் மோர்க்குழம்பு, ரசம் இத்யாதிகளுடன். என்னது மட்டன் மோர்குழம்பா? என்று ஆச்சர்யத்தில் புருவம் தூக்குவீர்களானால் நிச்சயம் நீங்கள் இதை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். அட்டகாசமாய் இருந்தது. டிபிக்கல் மோர்க்குழம்பில் மட்டனோடு. டிபரண்ட் காம்பினேஷன். தண்ணிக்க்குழம்பு இருந்த அளவிற்கு கெட்டிக் குழம்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதே சிக்கன் சாப்பாட்டில் உள்ள மோர்குழம்பாகட்டும், கெட்டி குழம்பாகட்டும் தண்ணிக்குழம்பாகட்டும் எல்லாமே செம்ம. 

இவர்களின் ஸ்பெஷல் நெய்ச் சோறு. நெய்சோறோடு சில பல காம்பினேஷன்களை கொடுத்தாலும் ஐ ரெகமெண்ட் நெய்சோறு+ பச்சை மிளகாய் சிக்கன். அல்லது நெய்சோறு + நெய்சிக்கன். டிவைனோ டிவைன். இன்னும் சில அயிட்டங்களை நாங்கள் இன்னும் சுவை பார்க்கவில்லை. இப்போதுதான் திறந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்து சொல்கிறேன். 

பசும்பொன் உணவகம்

திநகர் பிக் பசார் பின்பக்கம்.

காமாட்சி மெஸ் அருகில். 

Ward - 136, Corp, New No: 6, Old No 5/2, opposite MULTILEVEL CAR PARKING - THE GREATER CHENNAI CORP- MLCP - GCC, Singaravelu St, Chennai, Tamil Nadu 600017

சாப்பாட்டுக்கடை - தமிழ் முஸ்லிம் கிட்சன்

உணவகமாய் திறந்து அதற்கான மெனக்கெடல்களை விட கொஞ்சம் சுலபமானது க்ளவுட் கிச்சன் தான். அப்படியான க்ளவுட் கிச்சன் எத்தனையோ ஆரம்பித்தாலும் நிலைத்து நிற்பது கிடையாது. காரணம் பல க்ளவுட் கிச்சன்கள் மாஸ்டர்களை நம்பி ஆரம்பிப்பதே. அப்படியே ஒழுங்காய் நடந்தாலும் ஸ்விக்கி ஜொமேட்டோவுக்கு கொடுக்குற காசை மீறி லாபம் எடுக்க முடியாமல்.. சரி அதைப்பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. 

அப்படியான ஒரு கிச்சன் தமிழ் முஸ்லிம் ஸ்டைல் உணவு என்று பார்த்ததும் நம்பரை எடுத்து போன் அடித்தேன். தம்பி எர்ஷத்தான் போன் எடுத்தார். நான் கிச்சன்லேயே வந்து சாப்பிடுகிறேன் என்று அங்கேயே கிளம்பிப் போய் சாப்பிடப் போனேன். என்ன சாப்புடுறீங்க? என்றவரிடம் மெனு கேட்டேன். சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் ப்ரை, என்றார்.  சரி எல்லாத்துலேயும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்றேன்.



சீரக சம்பா பிரியாணி டேக்ஸாவை திறக்கும் போதே மணம் நாசியை தாக்கியது. நன்கு வெந்த சிக்கன் பீஸ்களோடு மணக்கும் பிரியாணி வந்தது. வழக்கமாய் சீரக சம்பா பிரியாணி சாப்பிடும் போது அந்த அரிசியின் நல்குணங்களோடு, அளவாக சேர்க்கப்பட்ட மசாலா, சில பிரியாணிக்களீல் சேர்க்கப்படும் பச்சைமிளகாய் சமயங்களில் அடி நாக்கில் சுள்ளென உரைப்பை உணர வைக்கும் கிளுகிளுப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வித்யாசமனா சுவையில் இருந்தது இந்த பிரியாணி. சாப்பிட்ட மாத்திரத்தில் நல்ல மசாலா சுவையோடு கூடவே சாப்பிட்டு முடிக்கும் போது லேசான ஸ்வீட்னெஸை உணர்ந்தேன். தம்பி பால் ஏதாச்சும் சேப்பீங்களா? என்று கேட்ட போது ஆமாண்ணே.. தேங்காய் பால் கொஞ்சம் பாதம் அரைச்சு விடுவோம் என்றார். உடன் கொடுக்கப்படும் கத்திரிக்காய் வழக்கமாய் எண்ணெய் அதிகமாய் மிதக்கும். இந்த கத்திரிக்காயில் அப்படியில்லை. நன்கு வெந்த கத்திரிக்காய் கிரேவி. அதிக காரம் இல்லாமல் சரியான காம்பினேஷன்.

சிக்கன் 65 வழக்கமாய் இல்லாமல் நல்ல பீஸ்களுடன், மசாலா மேரினேட் ஆகியிருக்க, கார்ன் ப்ளவர் மாவில்லாமல் வெறும் மசாலாவில் மட்டுமே ஊறிய சிக்கன் நன்கு  எலும்பு வரை வெந்திருக்க, எலும்போடு மென்று சாப்பிடக்கூடிய வகையில் இருந்தது. மசாலாவில் உள்ள காரமும், சிக்கனி ஜூசும், நம் சலைவாவோடு கலக்க.. ம்ம்ம்ம்.. செம்ம. 

வஞ்சிரம் மீன் மட்டும் ப்ரை நல்ல சைஸ் பீஸ்சாய் இருந்தது. மசாலா மட்டும் இன்னும் கொஞ்சம் ஏறியிருக்க வேண்டும். பட் குட். வேற ஏதாச்சும் புது அயிட்டங்கள்  போடும் போது சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன பில் தொகையைப் கேட்ட போது அதிர்ச்சியாய் இருந்து. சிரக சம்பா சிக்கன் பிரியாணி 150 ரூபாயாம். அப்ப மத்ததையெல்லாம் பார்த்துக்கங்க.

சுவிக்கி, ஜொமோட்டோவில் வந்துவிட்டதாய் போஸ்ட் போட்டிருந்தார். வாழ்த்து சொல்ல போன் செய்த போது அண்ணே தேங்காய்ப்பால் ரசம் பண்ணியிருக்கேன் என்றார். உடனே கிளம்பினேன். நான் இது வரை தேங்காய்ப் பால் ரசம் சாப்பிட்டதேயில்லை.  

உலை கொதித்துக் கொண்டிருந்தது. சாப்பிடப்போகிறோம் என்கிற ஆவலில் போனதால் “தம்பி கொஞ்சம் குஸ்கா மட்டும் கொடுங்க” என்று கேட்டேன். தம்பி ஒரு கரண்டி சிரக சம்பா பிரியாணி குஸ்காவைக் கொடுத்தார். முதல் நாள் சாப்பிட்ட சுவையை அப்படியே தக்க வைத்திருந்தார். சாப்பிட்டு முடிப்பதற்குள் சாதம் தயாராகி இருக்க, சுடச்சுட சாதம், தேங்காய்ப்பால் ரசம். கூடவே கேரட் கூட்டு. 

மட்டன், சிக்கன் வேக வைத்த தண்ணீரில் சில சமயம் சூப் வைப்பார்கள். அதுவிதமான அலாதியான சுவையை தரும். கிட்டத்தட்ட மட்டன் தண்ணிக்குழப்பு போன்ற டேஸ்டுடம் தேங்காய்ப் பாலில் செய்யப்பட்ட ரசம். லேசான புளிப்போடு அட்டகாசமாய் இருந்தது. யாராச்சும் இதை வாங்கி சாப்பிடுகிறவர்கள் வீட்டில் சுடான சாதம் வைத்துக் கொண்டு வாங்கிச் சாப்பிடுங்கள். அடிபொலி டிவைனாக இருக்கும். நல்ல தரமான வீட்டு சமையல். தம்பியிடம் இன்னும் நிறைய அயிட்டங்கள் லிஸ்ட் வைத்திருக்கிறார். ஒவ்வொன்றாய் கட்டவிழித்துவிட்டு, களேபரமாய் கடை நடக்க வாழ்த்துக்கள். 

சுவிக்கி ஜோமேட்டோவைத் தவிர, இந்த நம்பரில் போன் செய்தாலும் உடனடியாய் அனுப்பி வைக்கிறார்.  எர்ஷர் 9944995980

கேபிள் சங்கர்.
 

Feb 15, 2024

அஸ்தமனமாகும் உதயம்

 அஸ்தமனமாகும் உதயம்

தனியாய் சினிமா போக ஆரம்பித்த காலம் அது. அப்போது தான் உதயம் திரையரங்கத்தை திறந்தார்கள். முதலில் திறக்கப்பட்டது உதயம் மற்றும் சந்திரன் என்று தான் நினைக்கிறேன். மற்ற தியேட்டர் வேலை நடந்து கொண்டிருந்தது. முதன் முதலில் அங்கே ரிலீஸான படம் ரஜினியின் சிவப்பு சூரியன். சைக்கிளில் சென்று படம் பார்த்தேன். சைக்கிள் பார்க்கிங், அங்கே விற்கும் சமோசா, கூல்டிரிக்ச் எல்லாம் சேர்த்து 10 ரூபாய்க்குள் படம் பார்த்துவிட்டு வந்துவிடலாம். உதயத்தின் பெரிய ஸ்க்ரீனைப் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. இன்றைக்கு போல மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் இல்லாத காலம். ஒரே கட்டிடத்தினுள் நான்கைந்து காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் தான் அப்போதைய பேஷன். சிவப்பு சூரியனில் மொக்கை வாங்கினாலும், அட்டகாசமான ஒரு திரையனுபவத்தை கொடுத்தது உதயம் தியேட்டர்.

உதயம் ஆரம்பித்த காலத்தில் பில்லர் பக்கம் மட்டுமே கொஞ்சம் ஆங்காங்கே கூட்டம் இருக்கும். அந்தப் பக்கம் கே.கே.நகர். எதிரே வடபழனி பக்கம்  போகப் போக இருளோ என்று இருக்கும். எங்கம்மா இந்த ஏரியால எல்லாம் தியேட்டர் கட்டுனா யாரு வருவாங்க? அதுவும் நைட் ஷோ எல்லாம். என்று ஒரு முறை மாலைக் காட்சி படம் பார்த்துவிட்டு வரும் போது சொன்னது இன்றைக்கும் நியாபகம் இருக்கிறது. சென்னையில் பத்து மணிக்கு தான் இரவுக் காட்சி என்று இருந்ததை 9.15 மணிக்கு என ஆரம்பித்த ஒரே தியேட்டர் சென்னையில் உதயம் மட்டுமே. காரணம் அதிக பட்சம் 12 மணிக்குள் இரவுக் காட்சி முடிந்துவிடும். சமீப காலங்களில் கூட பத்து மணிக்குள்ளேயே படம் போடும் கலாச்சாரத்தை கடைபிடித்து வந்தார்கள்.

உதயம், சூரியன், சந்திரன் மூன்று தியேட்டர்கள். உதயம் கிட்டத்தட்ட 800 சொச்ச சீட்கள். சந்திரன் தியேட்டராக நன்றாக இருந்தாலும் திரை ரெக்டாங்கிலாய் இல்லாமல், ஸ்கொயராகவும் இல்லாமல் ஒரு மாதிரி அரைகுறையாய் இருக்கும். அதனால் அங்கே எனக்கு படம் பார்ப்பது அன்றைக்கே பிடிக்காது. சூரியன் நல்ல அகன்ற திரை. சின்ன தியேட்டர். ஒலி,ஒளி எல்லாம் சிறப்பாக இருக்கும்.

என் சினிமா ஆர்வமும், அறிவும் வளர்த்தெடுத்த இடம் உதயம் தியேட்டர் என்றால் அது மிகையாகாது. இதயத்தை திருடாதே, நாயகன், தளபதி, பொட்டி வராத குணா, காதலுக்கு மரியாதை, ரோஜா, அலைபாயுதே என வரிசைக்கட்டி சொல்லிக் கொண்டே போகலாம். நான் எல்லா படங்களை அங்கே தான் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். சைதாப்பேட்டைக்கு அருகில் என்பதால் மட்டுமல்ல. தொடர்ந்து அங்கேயே படம் பார்ப்பதால் அங்கே வேலை செய்யும், கைலாசம், ரவி, பார்க்கிங் சேகர், ஆகியோர் அனைவரும் எனக்கு பழக்கம் ஆதலால் எப்போது போனாலும் எனக்கு டிக்கெட் கன்பார்ம். படத்தின் தரம், அதன் ஓட்டம் பற்றியெல்லாம் அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்து இது ஹிட்டு, இத்தனை வசூல் என்று அன்றைக்கு கேட்க ஆரம்பித்த பழக்கம் தான் இன்று என்னை ஒரு விநியோகஸ்தராக, இயக்குனராய், மாற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் உதயத்தில் படம் ரிலீஸ் இல்லையென்றால் அது ஏதோ அவமானமான விஷயமாய் மாறி பேசும் அளவிற்கானது.

கே.கே.நகர், அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை, சுற்று வட்டாரத்தில் நல்ல மிடில்க்ளாஸ், ஹைக்கிளாஸ் தரத்துடன், பார்க்கிங், ஒலி,ஒளி அமைப்புடன் இருக்கும் சிறந்த தியேட்டர் உதயம் காம்ப்ளெக்ஸ்தான். அது மட்டுமில்லாமல் சினிமா ஏரியா பார்டர் கணக்கில் உதயம் சிட்டியில் வரும் கடைசி தியேட்டர். அந்தப்பக்க்கம் பின்னாளில் ஆரம்பித்த காசி, பழைய விஜயா, இந்திரா போன்ற அரங்குகள் செங்கல்பட்டு ஏரியாவில் வரும். எனவே சென்னையின் முக்கியமான கலெக்‌ஷன் செண்டர் உதயம் காம்ப்ளெக்ஸ் தான்.

நிறைய உதவி இயக்குனர்களின் கனவு அவர்களின் படம் உதயம் தியேட்டரில் ரிலீஸாவதுதான். நண்பர் ஒருவர், நல்ல கதை சொல்லி. உதவி இயக்குனர். இன்று வரை படம் செய்யவில்லை. அது தனிச் சோகம். ஆனால் அவர் ஒவ்வொரு முறை கதை சொல்லிவிட்டு அதை நாம் பாராட்டினாலோ இல்லை விமர்சனம் செய்தாலோ, வேகமாய் தலையாட்டி ”இதெல்லாம் செல்லாது செல்லாது. மொத நா மொத ஷோ உதயம் காம்ப்ளெக்ஸுல படம் பார்க்கும் போது அங்கே கிடைக்கிற கைத்தட்டல், பாராட்டுத்தான் நிஜ ரிசல்ட். மத்ததெல்லாம் வேஸ்ட் என்பார். காரணம் அங்கே வரும் ஆடியன்ஸின் தரம். லோ, மிட், மற்றும் ஹைக்ளாஸ் என எல்லாரையும் தன் வசம் வைத்திருந்த வளாகம் அது. அங்கே கிடைக்கும் ரிசல்ட் தமிழகம் எங்கும் கிடைக்கும் ரிசல்டுக்கு ஈக்குவலாய் இருக்கும்.

உதயத்தில் சரக்கடித்துவிட்டு சென்றால் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். அதற்காக அங்கே படம் பார்க்க இரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்துவிட்டு பக்கத்து ஹவுஸிங் போர்ட் காம்ப்ளெக்ஸில் இருக்கும் ஒயின் ஷாப்பில் சரக்கடிப்பதற்காக மாலைக்காட்சிக்கே வந்துவிடுவோம். குடித்து சாப்பிட்டுவிட்டு, போதையெல்லாம் இறங்கிய பிறகு தெளிவாய் படம் பார்த்துவிட்டு வீடு போய் சேருவோம். தியேட்டர்காரனுக்கும் அவ்வளவாய் வாடை வராது. வீட்டுலேயேயும் மாட்ட மாட்டோம். தியேட்டர் அனுமதிக்கு என் இன்ப்ளூயன்சும் காரணம்.

உதயத்தில் ரசிகனாய் வளர்ந்தவன் அதே தியேட்டரில் விநியோகஸ்தராகவும் படம் வெளியிட்டது காலத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. எங்களது உயிரிலே கலந்தது திரைப்படம் அங்கே சூரியனில் தான் வெளியானது. ஒரு பிரபல நடிகர் தம்பதிகளின் காதலுக்கு அணிலாய், நானும், அந்த தியேட்டர் ஸ்பெஷல் கேபினும் இருந்த காலம். அப்படம் எங்களுக்கு பல படிப்பினைகளை தந்த படம். அது பற்றி என் சினிமா வியாபாரம் புத்தகத்தில் டீடெயிலாய் இருக்கிறது.

சென்னை ஏரியாவுக்குள் ஒரு சிறந்த கலெக்‌ஷன் செண்டர். கணக்கு வழக்கு எல்லாம் சரியாய் கொடுக்கும் தியேட்டர் என ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவுக்கும் பிடித்த தியேட்டராய் இருந்தது உதயம் காம்ப்ளெக்ஸ்.  இத்தகைய தியேட்டரின் மேனேஜ்மெண்டுடனான முரண்பாட்டால், தன் படங்கள் இனி உதயம் திரையரங்கில் வெளியாகாது என்று முடிவெடுத்து இன்று வரை பிடிவாதமாய் இருக்கிறவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.  எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கும் தானே!.

இப்படியாக இருந்த உதயம் மெல்ல தன் பொலிவிழக்க ஆரம்பித்தது. சினிமா அவ்வளவுதான் என பைரஸி, சிடி, டிவிடி, டெலிவிஷன் என பல காரணங்களால் அவ்வப்போது தொய்வடையும் போது எல்லா தியேட்டர்களைப் போலவே பெரிய திரையரங்கை நடத்த முடியாமல் உதயம் பால்கனியை மினி உதயம் ஆக்கினார்கள். பெரிய திரை, புஷ்பேக் என இருந்தாலும் ஏனோ கீழ் தியேட்டர் சத்தம் சில சமயம் மேலேயும், மேல் தியேட்டர் சத்தம் கீழேயும் கேட்பது எனக்கு பிடிக்காமல் போனது. ஆனால் அவர்களின் மூன்று தியேட்டரிலிருந்து நான்கு தியேட்டர் பரிணாம வளர்ச்சி, தியேட்டர் வளாகம் ரியல் எஸ்டேட் கைகளில் போகாமல் காப்பாற்றியது. மற்றொரு காரணம் தியேட்டர் ஓனர்களின் குடும்ப டிஸ்ப்யூட் தான் என்று சொல்ல வேண்டும்.

ஆம் ஓனர்கள் தான். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பார்ட்னர்கள் கொண்ட தியேட்டர் அது. மூன்றாவது தலைமுறையை பார்க்க ஆரம்பித்திருந்த நேரம். தியேட்டரை விற்றுவிடலாம் என்று ஒரு கூட்டமும், இல்லை நடத்தலாம் என்று பஞ்சாயத்து ஓடியதாய் நிறைய கதைகள் எல்லாம் உண்டு. கடைசியில் அது உண்மை தான். காரணம் 2008 வரைக்கும் அந்த திரையரங்கம் கோர்ட்டின் கண்ட்ரோலில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு  உதயத்தை நிறுவியவரே விலைக்கு வாங்கி, இன்றைக்கு விற்றிருக்கிறார்.

உதயம் மங்கிப் போனதற்கு காரணம் சுற்றி உருவாகியிருக்கும் அப்கிரேடட் திரையரங்குகளின் வசதிகள் அங்கு இல்லாதது. எந்த தியேட்டரில் நான் படம் பார்த்து வளர்ந்தேனோ அந்த தியேட்டரில் நான் கடைசியாய் படம் பார்த்து, பார்த்தது என்று கூட சொல்ல முடியாது. எங்களுடய ‘6 அத்யாயம்” திரைப்பட வெளியீட்டின் போது.  அதன் பிறகு ஏனோ அங்கே படம் பார்க்க ஆர்வமே ஏற்படவில்லை. சீட்கள் சுமாராக இருப்பதாகவும், ஒலி,ஒளி அமைப்பும் அத்தனை சிலாக்கியமாய் இல்லாததாலும் மெல்ல தியேட்டர் தன் பொலிவை இழந்தது. ஆனால் இன்றைக்கும் அதை புதுப்பித்து தியேட்டராக மாற்றினால் மிகச் சிறந்த செண்டராய் இருக்கும். அது நடக்காது. காரணம் இன்றைய சினிமா தியேட்டர்களின் நிலை. திடீரென பழைய தியேட்டர்களை எல்லாம் புதிதாய் அப்கிரேட் செய்து புதிய புதிய வசதிகளோடு திறக்கும்  நிகழ்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருகிற அதே நேரத்தில், உதயம் போன்ற மக்களின் தியேட்டர்கள் மூடப்படுவது வருத்தமான விஷயம் தான். ஏனென்றால் டிக்கெட் ரேட்டிலிருந்து உணவுகள் வரை மிகவும் நியாயமான விலையில் கிடைத்துக் கொண்டிருந்த ஒர் இடம்.  

இன்றைய தியேட்டர்கள் மக்களின் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறது. மக்கள் திரையரங்குக்கு வர ஏனோ தயக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மேலும் பல திரையரங்குகளை மூடச் செய்யும். தியேட்டர்கள் இருக்கும் இடத்தில் பெரிய கேட்டட் கம்யூனிட்டி வரலாம். அங்கே வசிக்கும் மக்களுக்காக தனியே சின்ன தியேட்டர் ஓப்பன் செய்யப்படலாம். இன்றைய காலத்தில் ஒவ்வொரு வீடும் ஒரு மினி திரையரங்காய் மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் டெக்னாலஜி. எல்லார் வீட்டிலும் குறைந்த பட்சம் 55 இஞ்ச் டிவியியும் ஹோம் தியேட்டரும் இருக்கும் இடமாய்த்தான் உதயம் தியேட்டர் இடம் மாறப் போகிறது. நான்கு ஸ்க்ரீனில் 1500 பேர் பார்த்த இடத்தில் 500 வீட்டு ஸ்க்ரீனில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்க்கப் போகிறார்கள். சினிமா பார்க்கும் மீடியம் தான் மாறுகிறது. சினிமா ஏதோ ஒரு வித மீடியத்தில் உதயமாகிக் கொண்டேதான் இருக்கும்.

கேபிள் சங்கர்

 15-2-2024

 

 

Feb 7, 2024

சாப்பாட்டுக்கடை- கும்பகோணம் மங்களாம்பிகா

 ஏற்கனவே இவர்களைப் பற்றி சில வருடங்களுக்கு முன் சாப்பாட்டுக்கடை பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.நான் எப்போது கும்பகோணம் போனாலும் இவர்களுடய ரவா தோசை, சாம்பார், கார சட்னிக்கு அடிமை. அட்டகாசமாய் இருக்கும். முன்பு கும்பேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் வைத்திருந்தவர்கள் இப்போது அந்த கோவிலின் பிரகாரத்தின் பின்னால் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே செட்டப்பில் தான் இக்கடையும்.

நாங்கள் சென்ற போது ஏகப்பட்ட கூட்டம். இத்தனைக்கும் வார நாட்கள் தான். வெளியூர்க்காரர்கள் தான் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த தெலுங்குகார கஸ்டமரிடம் கும்மோணத்துக்கார சப்ளையர் தெலுங்கு அரிசு உப்புமாவை “உப்பு பிண்டி” பிய்யம் உப்பு பிண்டி என்று ரெகமெண்ட் செய்து கொண்டிருந்தார்.  இடம் கிடைத்து உட்கார்ந்த மாத்திரத்தில் உடனடியாய் ஆர்டர் செய்தது ரவா தோசைதான். நல்ல முறுகலா கொடுங்கன்னு சொல்லி ஆர்டர் செய்தேன். மகனார்கள் நெய் பொடி தோசை ஆர்டர் செய்தார். இன்னொருவர் பரோட்டா. மனைவியும் அம்மாவும் தோசை மற்றும் ரவா. 

நான் கேட்டார்ப் போலவே நல்ல முறுகலாய் ரவா தோசை வந்தது. உடன் காரச்சட்னியை கேட்டு வாங்கி போட்டுக் கொண்டேன். நல்ல எண்ணெய் ஊற்றி பொன்முறுவலாய் ஒர் ரவா தோசை. பிய்த்து சாப்பிட எடுக்கும் போதே ரவா தோசையின் ப்ரவுன் நிற முறுகல் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கொடுக்க, சாம்பாரில் தொட்டு ஒரு வாய், தேங்காய் சட்னி, சாம்பாருடன் ஒரு வாய். காரச்சட்னியுடன்  ஒரு வாய் சாப்பிட்டதும் ஒவ்வொரு விள்ளலும் வாயில் கரைந்து போனது. கண் மூடி கண் திறப்பதற்குள் தோசை காலி. இத்தனை நாள் இங்கே நான் ட்ரை செய்யாத அயிட்டம் பொடி தோசை. அதற்கு காரணம் நிறைய உண்டு. பெரும்பாலான பொடி தோசைகள் நன்கு வழுமூனாக அரைத்த பொடியாய் இருக்கும். அதுவும் காரமும் இல்லாமல், பருப்பு அதிகமாய் நரநரவென நெய்யோடும், எண்ணெயோடும் இருக்கும். அது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவர்கள் கொடுத்த பொடி அப்படியல்ல.. என்னவென்று சொல்ல..

நன்கு பொன்நிற கலரில், நெய்யூற்றி வெந்த தோசைக்கு நடுவில், கல்லில் இடித்த மிளகாய் விதைகள் பாதி அரைப்பட்ட பத்தத்தில் நல்ல காரம் மற்றும் சரியான மிக்ஸுடன் வறுத்த பருப்பையும் சேர்த்து அரைத்த பொடி. தோசையை பிரித்துப் பார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறியது. நெய்யை தாராளமாய் ஊற்றி, உள்ளே மிளகாய் பொடியை முழுவதுமாய் ஸ்பெர்ட் செய்திருக்க, ஒவ்வொரு விள்ளலுக்கும் நடு நாக்கில் லேசான மிளகாயின் காரமும், பருப்பும் அட அட அட.. டிவைனின் முழு அர்த்தத்தை இந்த பொடி தோசை சாப்பிட்டு விட்டு புரிந்து கொள்ளவும். அத்தனை அட்டகாசமான பொடி தோசை. ஒரு விள்ளல் சாப்பிட்டுவிட்டு மிஸ் செய்யக்கூடாது என்று இன்னொரு தோசை ஆர்டர் செய்தோம். அதை சாப்பிட்டுவிட்டு என் இளைய மகன் “அப்பா எனக்கு வந்த தோசையை விட உன் தோசை இன்னும் சூப்பரா இருக்கு” என்றான். பொடி தோசையின் மகிமை. உள்நாக்கு காரம் அடங்க அடங்க.. இன்னும் கேட்குமே மோர்!! 

எனவே கும்பகோணம் போகிறவர்கள் நிச்சயம் மிஸ் செய்யக்கூடாத ஒரு வெஜ் உணவகம் இந்த மங்களாம்பிகா மெஸ். கூட்டம் அதிகம் ஆக, ஆக, ஜிபே, கார்ட் எல்லாம் கிடையாது என்று கேஷ் கேட்கிறார்கள். அது மட்டும் கொஞ்சம் இடித்தது. 

கும்பகோணம் மங்களாம்பிகா

கும்பேஸ்வரர் கோயில் பிரகார வீதி.


Jan 28, 2024

சாப்பாட்டுக்கடை- Tiffin Shashtra Anna nagar

காபி ஷாஷ்த்ரா என்கிற கடையை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். நல்ல அட்டகாசமான காபி, ஸ்நாக்ஸ், டீ போன்றவை கிடைக்கும். என்ன கொஞ்சம் காஸ்ட்லியாய் இருக்கும். பட் தரம் நன்றாக இருப்பதால் நல்ல கூட்டமும் இருக்கும்.  அவர்கள் காபி ஷாஷ்த்ராவை டிபன் ஷாஷ்த்ராவாக மாற்றியிருக்கிறார்கள். அண்ணாநகரில் மட்டுமே. 

ஏகப்பட்ட கூட்டம். உபவிஹாரை விட அதிகமாய் இருந்தது. அதென்ன மாயமோ தெரியவில்லை. சமீபகாலமாய் தமிழகம் எங்கும் கர்நாடக ஸ்டைல் வெஜ் உணவுகள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் சோஷியல் கிச்சன் என்று ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹைதராபாத்தில் ஒரு பெரிய கிளை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் கார சாரமாய் சாப்பிடும் ஆந்திராக்காரர்கள் எப்படி தித்திப்பான சாம்பாரை சாப்பிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் ஏற்கனவே ஈட்டிங் சர்கிள், உபவிஹார் போன்ற கடைகளில் நம்மூர் சாம்பாரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சரி.. டிபன் ஷாஷ்த்ராவுக்கு வருவோம். இவர்களும் கர்நாடக ஸ்டைல் வெஜ் உணவுதான். 

பென்னே தோசை. ஓப்பன் மசாலா பென்னே தோசை, கார பாத், செளசெள பாத், இட்லி, தட்டே இட்லி, வடை, ராவா தோசை போன்ற லிமிடெட் அயிட்டங்கள் தான். கூட்டம் அத்தனை அள்ளும். முக்கியமாய் பென்னே தோசை ஆஸ் யூஸ்வலான கர்நாடக பதத்தில் வரும் தோசை தான். உருக்கிய வெண்ணெயைத்தான் ஊற்றுகிறார்கள்.  ஓப்பன் மசாலாவில் அவர்கள் கொடுக்கும் மசாலா அதிக வெங்காயத்தோடு கொஞ்சம் காரம் தூக்கலாய் செம்மையாய் இருக்கிறது. மற்ற கடைகளில் ஸ்மாஸ்ட் பொட்டேட்டோவாக இருக்கும். காரம் குணம் குறைவாகவே இருக்கும்.

இவர்களது சாம்பார் இனிப்பாக இருந்தாலும் சுவை கொஞ்சம் டிபரண்ட் தான். ஆஸ்யூஷுவல் சாம்பாரோடு தரும் சட்னி. தோசை மசாலாவுக்கு பிறகு எனக்கு பிடித்தது இவர்களது கார பாத். வழக்கமாய் கார பாத் என்றால் ரவா உப்புமாவைத்தான் தருவார்கள் என்றாலும் அதில் சுவை வித்யாசமாய் இருக்கும் ஆனால் ப்ளெண்டாகத்தான் இருக்கும். இவர்கள் கொஞ்சம் காரம் போட்டு தருகிறார்கள் பேருக்கு ஏற்றார்ப் போல கார பாத். சிம்பிள் டிபன். நல்ல தரம். உபவிஹார் போல ரொம்ப நேரம் காக்க வைக்காமல் இங்கே பில் போட்டதும் அதே பில் K.O.T யாய் உள்ளே சென்று விட அடுத்தடுத்த ஆர்டர்கள் உடனடியாய் கொடுக்கப்பட்டாலும் கொஞ்சம் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. உபவிஹார் போல இல்லை. குறைந்த விலையில் நிறைந்த கர்நாடக டிபன் சாப்பிட, உபவிஹாருடன் இப்போது டிபன் ஷாஷ்த்ராவும் சேர்ந்திருக்கிறது. 


Dec 29, 2023

சாப்பாட்டுக்கடை- ஆர்.ஆர் மெஸ் கோவை

 கோவையில் எப்போது போனாலும் ஒரு முறையாவது வளர்மதி மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவேன். இம்முறை மிகவும் டைட்டான ஷெட்டியூலில் போயிருந்ததால் போக முடியவில்லை. வேலை வேறு கிடைத்த இடத்தில் சாப்பிட்டு விட்டு விடுவோம் என்று தோன்றியதால் காலை டிபனை தங்கிய ஓட்டலிலேயே முடித்துவிட்டு, மதியம் நிகழ்வில் போடப்பட்ட சாப்பாட்டை சாப்பிட உட்கார்ந்தேன். நான் வெஜ் சாப்பிடும் ஆசையில் இருந்தவனுக்கு வெஜ் பிரியாணி, குருமா, தயிர் பச்சடி, தயிர் சாதம், கத்திரிக்காய் காரக்குழம்பு. கத்திரிக்காய் காரக் குழம்பின் கலர், மேல் மிதந்த எண்ணெய் கத்திரிக்காயும் கமான், கமான் என்று அழைத்தது. வெஜ் பிரியாணி தரமாக இருக்க, கொடுக்கப்பட்ட வெஜ் குருமா மட்டும் கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. கடைசியாய் தயிர்சாதத்தை போட்டுக் கொண்டு அந்த கத்திரிக்காய் குழம்பை ஊற்றிக் கொண்டேன். அவ்வளவாய் காரமில்லாமல், நல்லெண்ணெய் மிதக்கும் கத்திரிக்காய். தயிர் சாதத்தோடு அட்டகாசமாய் இருக்க, யாருப்பா இந்த சப்ளையர்? என்று கேட்ட மாத்திரத்தில் அங்கே நிகழ்விற்கு வந்திருந்த நண்பர் செல்வா நம்முளுதுதான் சார் என்றார். அவரின் கடை பெயர் ஆர்.ஆர். மெஸ் என்றதும் நான்வெஜ் போடுறீங்களா? என்று கேட்டேன். நம்முளூது நான் வெஜ் தான் சார். இங்க தான் வெஜ் போதும்னு சொல்லிட்டாங்க என்றார் வருதத்தோடு. எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பை சிலாகித்தவுடன் "அப்ப நீங்க வெண்டைக்காய் மண்டி சாப்புட்டு பார்க்கணும்" என்றார். அடுத்த நாள் லஞ்சுக்கு நான்வெஜ் மற்றும் வெண்டைககாய் மண்டியுடன் வருகிறேன் என்று சொன்னார். அடுத்த நாள் மதியத்துக்காக காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன் அப்பேர்ப்பட்ட சுவை அந்த எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு.

அடுத்த நாள் மதியம் சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சிக்கன் மசாலா, மட்டன் பள்ளிப்பாளையம், எறா தொக்கு, மீன் குழம்பு, சாதம், தயிர் சாதம், ரசம், கூடவே அவர் சொன்ன வெண்டைக்காய் மண்டி. கட்டுச் சோற்றைப் பிரித்தவுடன் சீரக சம்பா பிரியாணியின் வாசம் மூக்கை தாக்கியது. பச்சை மிளகாய் போட்டு அரைத்த சிக்கன் பிரியாணி. அளவான காரத்துடன் நன்கு வெந்த சிகக்ன் பீசுகளுடன் சிறப்பாகவே இருந்தது. அடுத்ததாய் அதற்கு தொட்டுக் கொள்ள சிக்கன் மசாலாவை எடுத்தேன். சின்னச் சின்ன பீஸுகளோடு கிரேவியாய் இருந்தது சிக்கன் மசாலா.காரம் அத்தனை இல்லை. தக்காளியின் சுவை லேசாய் தூக்கலாய் இருந்தது. அடுத்து சாதம் போட்டு மட்டன் பள்ளிப்பாளையத்தையும் எறா தொக்கையையும் ஒரு கை பார்த்தேன். மட்டன் பள்ளிப்பாளையம் நல்ல காரத்துடன், தேங்காய் அரைத்த மசாலா மற்றும் தேங்காய் துண்டுகளோடு சின்ன சின்ன பீஸுகளாய் லேசாய் கிரேவியோடே தந்திருந்தார். செம்மையாக இருந்தது. அடுத்த சாப்பிட்ட எறாதொக்கு கேட்கவே வேண்டாம். பெரியதாகவும் இல்லாமல் சின்னதாகவும் இல்லாமல் எறா. அதற்கே உரித்தான லேசான தித்திப்புடன் சிறப்பு.  மீன் குழம்பு புளீப்பு அதிகமாகவும் இல்லாமல்  சரியாக இருந்தது. ரசத்ததையும் ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று ரச பாக்ஸை திறக்கும் போதே மணம் தூக்கியது. சென்னையில் இம்மாதிரியான ரசத்தை நான் அருளானந்தத்தில் சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு பிறகு இங்கு தான். சாப்பாட்டோடும், தனியாய் குடித்து வயிறு நிறைந்தது. கட்டங்கடைசியாய் தயிர்சாதம் வெண்டைக்காய் மண்டி. கெட்டியாய் குழம்பு எண்ணையில் வதக்கிய வெண்டைக்காயோடு, அரைத்துவிட்டபதத்தில் தயிர்சாத கிரேவி. தனியாய் சோறு போட்டு சாப்பிட்டாலும் சரி, சப்பாத்தி தோசைக்கும் கூட சாப்பிடலாம். அட்டகாசம். அண்ட் டிவைன். முட்ட முட்ட சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கத்தைக் கூட போட முடியாமல் வேலைக்கு போக வேண்டியதாகிவிட்டது.  கொங்கு சமையலிலிருந்து செட்டிநாட்டு சுவையில் இவர்களது உணவு மிகவும் சிறப்பு.

கோவையில் இருப்பவர்களுக்கு ஒரு முறை டேஸ்ட் செய்து பார்க்க

ஆர்.ஆர். மெஸ்

ராஜ ராஜேஸ்வரி புட்ஸ்

S.F No. 374, Therkku Thottam

Chil See Road, Saravanapettai (po)

cbe 641035

9894129912/9786688898

Nov 18, 2023

சாப்பாட்டுக்கடை - திருநெல்வேலி தோசைக்கடை

 கொரோனாவால் இழந்த ஒரு பெரிய உணவு அனுபவம் எது என்றால் அது திருநெல்வேலி தோசைக்கடையின் எண்ணெய் தோசையைத்தான்.சாலிகிராமத்தில் பரணி ஸ்டூடியோ எதிரில் சின்னதாய் ஒரு கடை இருக்கும். அங்கே சாப்பிடவென ஒரு சிறு கூட்டம் எப்பவுமே இருக்கும். அது கொரோனா காலத்தில் இல்லாமல் போய் பின் திறந்து மெட்ரோ வேலைக்காக மூடி தற்போது மேப்படுத்தப்பட்ட விரகடுப்பில் அதே திருநெல்வேலி தோசைக்கடை. அப்படி ஒன்றும் பெரிய மெனு இருக்காது. தோசை, எண்ணெய் தோசை, அடை, வெங்காய தோசை, பொடி தோசை.மசால் வடை அம்புட்டுத்தான்.

எண்ணெய் தோசையில் ஆரம்பிப்போம். விரகடுப்பில் போடப்பட்ட கல்லில் தோசை மாவு ஊற்றப்பட்டு, அது நமக்கு பரிமாறுகையில் நல்லெண்ணெய் மினுமினுப்போடு, மேலே ஒரு கரண்டி கெட்டி தேங்காய் சட்னியோடு பரிமாறுவார்கள். எண்ணெய் தோசையின் டேஸ்ட் நிச்சயம் நீங்கள் இதற்கு முன்னால் ஹோட்டல்களில் தோசை சாப்பிட்டிருந்தீர்களானால் அது இதற்கு முன் கிட்டே கூட நிற்க முடியாது. வீட்டில் கூட இப்படியான தோசைகள் தற்போது கிடைப்பதில்லை என்று ரெடிமேட் தோசை மாவு  குடும்பங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதிகம் முறுகல் இல்லாத, ஆனால் அதே நேரத்தில் நடுவில் லேசான எண்ணெய் முறுகலோடு ஒரு தோசை. அதற்கு கொடுக்கப்படும் தேங்காய் சட்னி அதைப் பற்றி ரெண்டு வரி தனியே சொல்லியே ஆகவேண்டும். தேங்காய் சட்னி என்றால் இனிக்க இனிக்க சட்னி சாப்பிட்டிருப்பீர்கள். பச்சை மிளகாய் வாசனையோடு காரமான தேங்காய் சட்னி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இவர்கள் கொடுக்கும் சட்னி வித்யாசமாய் இருக்கும் குறிப்பாய் முழுதாய் அறைக்கப்படாத தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் திப்பிலி திப்பில்யாய் தான் இருக்கும். ஆனால் எண்ணெய் தோசையுடனோ? அல்லது அடையுடன் சாப்பிட்டால் கூட அந்த தேங்காய் சட்னிக்கு மட்டுமே நாலு தோசை உள்ளே போகும். இதன் கூடவே காரச்சட்னி தருவார்கள். அது வேற லெவல் டேஸ்டாய் இருக்கும். குறிப்பாய் சட்னியோடு ஒரு விள்ளல் தோசையை அனுப்பினோமானால் நடு நாக்கில் லேசாய் சுர்ரென ஆரம்பிக்கும் காரம் அத்தனை ஆர்காஸமாய் இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது. 

வெங்காய தோசை என்றால் அதன் விஷேஷமே பொடிப் பொடியாய் நறுக்கிய வெங்காய்த்தோடு தோசை. எண்ணெய் தோசை என்பதாலும், விரகடுப்பு என்பதாலும் வெங்காயம் கிரிஸ்பியாய் எண்ணெயில் ஃப்ரை ஆகி, சட்னிக்களுடன் சாப்பிட ஆரம்பித்தால்  ரெண்டாவது போகாமல் விடாது. 

அடுத்த பொடி தோசை. உளுத்தம் பருப்பு, கலந்த மிளகாய் பொடி. பொடி தோசை என்றால் ஏதோ சிகப்பாய் ஒரு பொடியை தோசை மீது தூவி காரமும் இல்லாமல் உப்பு உரைப்பும் இல்லாம ஒரு தோசை இருக்குமே என்று நினைப்பீர்கள். ஆனால் இவர்கள் தோசையின் மேல் பொடி போடும் போதே லேசாய் கமரும். அப்படியான நல்லணெய் தோசை, பொடியை தோசை முழுவது ஸ்பிரட் செய்து தரப்படும் தோசையும், தேங்காய் சட்னியும் ஒரு விள்ளல் சாப்பிட்டால் டிவைன் தான்.

அடை முறுகலும், இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல், வெங்காயம் போட்ட அடை.  அடை என்பது என்னைப் பொறுத்தவரை தட்ட வேண்டிய அயிட்டம். சரவணபவன் காலத்திற்கு பிறகு அதை தோசையாய் ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்த போதே அதன் மிதிருந்த ஆர்வம் போய்விட்டது. மேலும் அடைக்கு அவியல் என்று கொடுக்க ஆரம்பித்த பின் சுத்தம். எனக்கு அடை என்றால் வெல்லம். அல்லது மிளகாய் பொடி எண்ணெய். அதன் மேல் நல்ல கெட்டி தயிர். வாவ்வாவ் வாவ்.. ம்ம்.. 

விலை அதிகமில்லாத, தரமான, சுவையான லிமிடெட் அயிட்டங்களுடனான உணவகத்ததை அனுபவிக்க வேண்டும் என்கிறவர்கள் நிச்சயம் ஒரு நடை போய்ட்டு வந்திருங்க. இலையை நீங்கதான் எடுக்கணும். பட் இலையில் ஏதாச்சும் மிச்சம் வச்சாத்தானே வழிந்தோடும் பிரச்சனை எல்லாம். 

திருநெல்வேலி தோசைக்கடை

பரணி ஸ்டூடியோ (அ) ஹாஸ்பிட்டல் எதிரில்.

சாலிக்கிராமம்

கேபிள் சங்கர்

https://youtube.com/shorts/UF6cZ9qsNBI?si=x4TGP6w4koDyEoZ4

Sep 5, 2023

சாப்பாட்டுக்கடை - கைமணம்

 கொரோனா காலத்தில் ஏகப்பட்ட க்ளவுட் கிச்சன்கள் முளைக்க ஆரம்பித்திருந்தது. அவைகளில் 80 சதவிகிதத்திற்கு மேலாய் இப்போது இல்லை. ஒரு சில க்ளவுட் கிச்சன்கள் சின்ன ரெஸ்டாரண்டாகவும் மாறியிருக்கிறது. சிலது இன்னமும் க்ளவுட் கிச்சனாகவே இருக்கிறது. அப்படியான ஒரு கொரோனா காலத்தில் நான் கண்டெடுத்ததுதான் இந்த கை மணம் உணவகம். ஒரு நாள் மதியம் கோபாலபுரம் பக்கம் போய்க் கொண்டிருந்த போது கொலைப் பசி. கைமணம் என்று பெயரைப் பார்த்ததும் அது ஒரு சின்ன சந்தாய் இருந்தது. அங்கே ஒரு ப்ளாட்டின் மாடியில் இருப்பதாய் தெரிய மேலேறிப் போய் பார்த்த போது அங்கே ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைப் போட்டு சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணியும் ஒரு சில சமையல்காரர்களும் இருக்க, சாப்பிட இடம் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த போது "சார் இது க்ளவுட் கிச்சன் தான் நோ டைனிங்" என்றார் பெண்மணி. சோகமாய் இறங்க ஆயத்தமான போது "பிரியாணி இப்பத்தான் இறக்கினோம். வேணும்னா அங்க டேபிள்ல உக்காந்து சாப்பிடுறீங்களா? என்று பிரியாணி அண்டாவை திறக்க, அட்டகாசமான மசாலா வாசம் என்னை சூழ்ந்தது. சூடான, மிகச் சூடான் மட்டன் பிரியாணி. அட்டகாசமான கத்திரிக்கா பச்சடியோடு சாப்பிட்டு முடித்தேன். மசாலா அதிகமில்லாத பிரியாணி. சுவைக்கு ஏதும் குறையில்லை.  அதன் பிறகு அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் பிரியாணி மண்டைக்குள் கிண்டினாலும் க்ளவுட் கிச்சன் என்று உறைத்ததால் போகாமல் வழக்கப்படி விஸ்வநாதன் மெஸ்ஸுக்கு போய்விடுவேன். 

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னால் போன போது கைமணம் ரெஸ்ட்டாரண்ட் ஆகியிருந்தது. ஒரு இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கான ஏசி இடம். சரி உள்ளே போய் அமர்ந்தோம். ஸ்டார்டர்ஸ் என்று லிஸ்ட் பார்த்தால் பொரிச்ச கோழி, சிக்கன மஹாராணி, மட்டன் மஹாராணி என்று லிஸ்ட் போடப்பட்டிருக்க, பொரித்த கோழியை ஆர்டர் செய்தோம். அட்டகாசமான மசாலாவோடு பொரிக்கப்பட்ட நான்கு சிக்கன் துண்டுகள். போட்டிருந்த மசாலாவும், கோழியும் செம்ம ஜூஸியாய் இருந்தது.  சிக்கன் மஹாராணி நல்ல நீட்டு துண்டுகளாய் போடப்பட்ட சிக்கன், மேலே டிரை மசாலாவோடு பொரிக்கப்பட்டிருந்தது. லேசான எலுமிச்சையை மசாலாவோடோ அல்லது தயிரோ சேர்திருப்பார்கள் போல.. லேசான புளிப்புடன் அந்த சிக்கன் டேஸ்ட் இருக்கும். அதையே தான் மட்டன் மஹாராணிக்கும்.நன்கு பொரிக்கப்பட்ட சன்னமான மட்டன் பீஸுகளுடன். நிறைய முந்திரிப்பருப்புகளுடன் கார்னிஷிங் செய்யப்பட்டு தருகிறார்கள். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த ஸ்டார்டர்ஸ். இவர்களின் மலாய் சிக்கன் கிட்டத்தட்ட சமிபத்திய பேமஸான இண்டியூஸ்ட் சிக்கனுக்கு ஈடாய் இருக்கிறது. 

கைமணத்தின் நல்ல சிக்கன் இடியாப்பம், மட்டன் இடியாப்பம், மற்றும் பன்னீர் இடியாப்பம் தருகிறார்கள். நல்ல தரமான மிக்ஸ். குறிப்பாய் பன்னீரும் சிக்கனும் அருமையோ அருமை. கூடவே தரப்படும் கிரேவியின் சுவையோடு சிறப்பாக இருக்கிறது. இவர்களின் மெனுவில் சுவாரஸ்யமான ஒன்று ரசம் சாதம். நல்ல சூடான ரசம் சாதம் சாப்பிட அதுவும் இரவில் கிடைப்பது அரிது. நல்ல ரசம். இவர்கள் க்ளவுட் கிச்சனாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கீழே உணவகம். ஆன் லைனில் கூட ஆர்டர் செய்து கொள்ளலாம்.  சூரியன் எப்.எம் ஆர்.ஜே பெண் ஒருவர் தான் இந்த கடையின் முதலாளி 

கைமணம்

15, Gopalapuram 1st St, Pudupet, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086

Jul 19, 2023

சாப்பாட்டுக்கடை - ரமேஸ்வரம் கஃபே - பெங்களூரு

 சமீபகாலமாய் எந்த ரீல்ஸ், ஷார்ட்சை திறந்தாலும் இந்த ராமேஸ்வரம் கஃபேயை பற்றிய வீடியோ தவறாமல் இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பில் போடும் கடை. பெரிய க்யூ நிற்கும் கடை என்றெல்லாம் வீடியோ அவர்கள் வீடியோவில் காட்டும் செந்நிற தோசை. மசாலா, இட்லி சாம்பார் எல்லாவற்றையும் பார்க்கும் போது வழக்கமான வேற லெவல் ஓட்டலை ஏத்திவிட்டு பிஸியாக்கிட்டாங்களோ என்கிற சந்தேகம் எனக்கு வராமல் இல்லை.  இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் போய் தான் பார்த்துவிடுவோமே என்று தேடிய போது பெங்களூருவில் மூன்று இடங்களில் இருந்தது. நாங்கள் ஜே.பி.நகர் பிராஞ்சுக்கு ஆட்டோ பண்ணிட்டு போனோம். ஆட்டோவெல்லாம் வச்சி சாப்பிடணுமா ஜி என்று உடன் வந்த நண்பர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டே வந்தார். எடுத்த குறிக்கோளில் கொஞ்சமும் வழுவாமல் போய் சேர்ந்த போது அத்தனை க்யூவெல்லாம் இல்லை. ஆனால் செம்ம கூட்டம். ஆனால் அது அங்கே தெரியாத வண்ணம் இடத்தை செட் செய்திருந்தார்கள். 

இத்தனைக்கும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடம் தான். தனியாய் வேலட் பார்க்கிங். ஓப்பன் கிச்சன். ஆங்காங்கே சாப்பிட வைக்கப்பட்டிருந்த டேபிள்கள். கோயில் தாழ்வாரம் போல உட்கார்ந்து கொள்ளக்கூடிய அளவில் சில இடங்களில் கல்லில் அமைத்திருந்தார்கள். நாங்கள் என்ன சாப்பிடுவது என்று மெனுவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்று பேர் பில் போட்டுவிட, நான் வடை ஒரு ப்ளேட். இரண்டு ஓப்பன் வெண்ணெய் மசாலா தோசை, இரண்டு காப்பி ஆர்டர் செய்தேன். 

தோசைக்கு தனி பில். கூடவே ஒரு வைப்பரேட்டர் சாதனம் ஒன்றை கொடுத்து தோசை ரெடி ஆனதும் அது பச்சை ஒளிர்ந்தபடி வைப்பரேட் ஆகும் என்றார்கள். அடுத்த கவுண்டரில் இட்லியும் வடையும் சொல்லிவிட்டு, அடுத்த சில நொடிகளில் சூடான வடையும், இரண்டு வகை கெட்டி சட்னி, டிபிக்கல் உடுப்பி சாம்பாரோடு கொடுத்தார்கள். வடை மினியேச்சர் சைசில் இருந்தாலும் நல்ல கிரிஸ்பியாய் வாயில் போட்டால் கரையும் அளவுக்கு இருந்தது. கூடவே கார சட்னி, மற்றும் தேங்காய் சட்னி வேறு. தேங்காய் சட்னியோடு சாம்பாரையும் தொட்டு ஒரு சிறு துண்டை சாப்பிட்டால் வாவ் அவ்வளவு நன்றாக இருந்தது. என்ன ஆளுக்கு ஒரு வடை என்று சாப்பிட நினைத்து ஒரு செட் ஆர்டர் செய்தது நொடிகளில் காலியாகும் என்று நினைக்கவேயில்லை. இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணிரலாமா ஜி? என்று ராமசந்திரனிடம் கேட்டேன். இருங்க தோசை எப்படி இருக்குனு பார்த்துட்டு ஆரடர் செய்வோம் என்ற போதே அவர் கையில் இருந்த டோக்கன் வைப்ரேட் ஆக ஆரம்பிக்க. ஓப்பன் மசாலா வெண்ணெய் தோசையை எடுத்து வைத்தார்கள். 

அட அட அட. ஊத்தப்பம் சைஸ் தோசை. அதன் மேல் நம்மூரில் போடுவது போல நைஸாய் அரைத்த பொடியாய் இல்லாமல் கொஞ்சம் நரநரவென பருப்பு தட்டுப்படும் அளவி/ர்கான பொடி. அதிக காரமில்லை. அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா. அதை சுற்றி லேசான மல்லி கார்னிஷிங். அதன் மேல் ஒரு தேக்கரண்டு வெண்ணெய். தோசை வேறு ஆவி பறக்க இருப்பதால் அதன் சூட்டில் மேலே உள்ளே வெண்ணைய் அப்படியே மசாலாவோடு தோசையில் உறிஞ்சப்பட்டு, மெல்ல வெண்ணெயின் பளபளப்பு தோசையை ஒரு விள்ளல் பிட்டவுடன் கையில் ஒட்டிக் கொண்ட வெண்ணெயே சாட்சி. கூடவே தக்காளி குருமா வேறு கொடுத்திருந்தார்கள். ஒரு விள்ளல் கார சட்னியோடு, இனனொரு விள்ளல் சாம்பார் சட்னியோடு, அடுத்தது குருமாவோடு, அடுத்தது மசாலாவோடு என சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அட்டகாசமான சுவை. குறிப்பாய் மேலே போடப்பட்டிருந்த பொடியோடு சாப்பிடும் போது அதில் ஏற்கனவே சொன்னது போல நரநரத்த பொடி மேலும் சுவையைக் கூட்டியது. ஆனால் இதை சாப்பிட்டு முடித்த போது வயிறு போதும் என்று சொல்லிவிட்டது. நல்ல வேளை வேறு எதுவும் ஆர்டர் செய்யவில்லை. முழு தோசையை வெண்ணெய் உருக பார்த்த போது ஒரு செக்சியான பெண்ணைப் பார்த்தது போல இருந்தது.

காபி கவுண்டர் தனி. நாட்டுசக்கரை, சக்கரை போட்டு தருகிறார்கள். சக்கரையில்லா காப்பி கேட்டாலும் தருகிறார்கள். ஹைதை போல எல்லாவற்றிலும் ஏற்கனவே சர்க்கரை போட்டு எல்லாம் தருவதில்லை. ராமேச்வரம் கஃபேயின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் நான் கருதுவது. முதலில் சுவை. சாப்பிட்ட பின் வயிற்றுக்கு எந்த உபாதையும் செய்யவில்லை. இரண்டாவது ப்ராம்ப்ட் சர்வீஸ். என்ன தான் செல்ஃப் சர்வீஸ் என்று வைத்துவிட்டாலும் உணவு வகைகளை தயாரித்து கொடுப்பதாகட்டும் இடத்தை உடனடியாய் க்ளீன் செய்வ்வதாகட்டும் எனக்கு நம்மூர் சரவணபவனை தான் நியாபகப்படுத்தியது. எப்படி இருந்த சரவணபவன். ம்ஹும். இவர்கள் இன்றைய தேதிக்கு 5 லட்சம் ஒரு ப்ராஞ்சு செய்வது எல்லாம் ஆச்சர்யமே இல்லை. விலையும் அத்தனை அதிகம் இல்லை என்றே சொல்வேன். இரண்டு ஓப்பன் தோசை, வடை ஒரு ப்ளேட், மூன்று கப் சாம்பார், இரண்டு காப்பிக்கு மூன்னூற்று சொச்சம் தான் பில்.  நல்ல தரமான வெஜ் டிபன் வகையாராக்களை பெங்களூருவில் சாப்பிட விரும்பினால் ஐ ரெகமெண்ட் ராமேஸ்வரம் கஃபே.


Jul 16, 2023

சாப்பாட்டுக்கடை - வளையம்பட்டியார் மெஸ்

இந்தக் கட்டுரை வீடியோ போடுவதற்காகப் போய் ஷூட் செய்துவிட்டு, வேற லெவல், சூப்பர் என்று எழுதப்பட்டது அல்ல. 

மெஸ்கள் புகழ் பெற ஆரம்பித்தவுடன் யார் உணவகம் ஆரம்பித்தாலும் கூடவே மெஸ் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உருவாக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மெஸ் என்பது சுவையில் தனித்தன்மையுடன், பெரிய லக்‌ஷரியாய் இல்லாமல், மிக நியாயமான விலையில் இருப்பது. அனால் மெஸ் என்று வைத்துக் கொண்டு 5 ஸ்டார் ஓட்டல் ரேட்டை வைத்துக் கொண்டு கல்லா கட்டிக் கொண்ட்டிருக்கும் காலத்தில் புதியதாய் வளையம்பட்டியான் மெஸ். அதுவும் மெஸ்களின் தலைமயிடமான திருவல்லிக்கேணியில் நண்பர் ஆசிப் ஆரம்பிக்கப் போவதாய் சொன்னவுடன் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது. 

முதல் நாள் போன போது ஏகப்பட்ட கூட்டம் விருந்தினர்கள் பல பேர் வந்திருந்தார்கள். நிறைய அயிட்டங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தனை கூட்டத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது தலைக்கறியும், அதன் குழம்பும், கூடவே குடல் குழம்பை அத்தனை சுவையாய் கொடுத்திருந்தார்கள். செஃப் ஹரி நாமக்கல்காரர்.  ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

மதிய சாப்பாட்டு தினமும், மட்டன், சிக்கன், மீன் குழம்பு, தலைக்கறி குழம்பு, ரசம், தயிர் மற்றும் பொரியல் வகைகளுடன் ஆரம்பித்தது. நல்ல அரிசி, மட்டன் குழம்பு அதிக மசாலா இல்லாமல், நன்கு வெந்த மட்டனின் வாசத்துடன் கெட்டியாய் கொடுத்தார்கள். சிக்கன் குழம்பும் அதே போலத்தான். இதில் அதிர வைத்தது தலைக்கறி குழம்பு. இதுவரை சாப்பிடாதவர்கள் மிஸ் செய்யாதீர்கள். அட்டகாசமான சுவை.. காரம், மணம், சுவை எல்லாமே சரியான அளவில் டிவைன். மீன் குழம்பும் அதே போலத்தான் அதிகமான கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்புடன், காரத்துடனும் இருந்தது. கடைசியாய் கெட்டித்தயிர் ஒரு சின்ன சட்டியில் தருகிறார்கள். மொத்த அளவில்லா சாப்பாடு வெறும் 120 ரூபாய்தான். 

அடுத்து இவர்களின் ஸ்பெஷாலிட்டி சைட் டிஷ்கள். குறிப்பாய், மட்டன் சுக்கா. சின்ன பீஸ்களாய் நன்கு வெந்த மட்டன். பெப்பர் தூக்கலாய் அட்டகாசமாய் இருந்தது அடுத்து சிக்கன் பிச்சிப் போட்டது என்று ஒரு தருகிறார்கள். ஆனால் இவர்களில் வைத்திருக்கும் பெயர் சிக்கன் ஸ்ப்ரே.. ஒரு முழு பீஸ் கோழியை நன்கு மேரினேட் செய்து வைத்துவிட்டு, அதை கேட்கும் போது பிய்த்துப் போட்டு, நல்ல கிரிஸ்பாய் அதில் லேசாய் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை கலந்து நல்ல மனத்துடன் தருகிறார்கள். அட்டகாசமான சைட்டிஷ். 

சிக்கன் சிந்தாமணி. அண்ட் பள்ளிப்பாளையம் ஆஸ் யூஷுவல் குறை நிறையென ஏதுமில்லை. சிந்தாமணி சின்னச் சின்னத் துண்டுகள் நன்கு மேரினேட் செய்யப்பட்டதினால் அதன் மசாலா நன்கு உள்ளே போய் கூடுதல் சுவையை கொடுத்தது. 

போட்டி. பெரும்பாலும் பல ஹோட்டல்களில் போட்டியை அவாய்ட் செய்துவிடுவேன். ஏனென்றால் அதை ஒழுங்காய் க்ளீன் செய்து சமைக்க மாட்டார்கள் என்கிற எண்ணம். ஆனால் இவர்களின் போட்டி செம்ம. அதுவும் லேசாய் க்ரீமியாய் தருகிறார்கள். போட்டி ரசிகர்கள் அதை ஒரு சின்ன கவளம் சோற்றில் போட்டு சாப்பிட்டுப்பாருங்கள்.

மட்டன் சுக்கா, நுரையீரல், சுவரொட்ட்டி எல்லாம் இவர்களின் ஸ்பெஷல் அயிட்டஙக்ள். சுவரொட்ட்டிக்க்கு முன்பே சொல்லி வைத்தால் தான் கிடைக்கும். மீன் வகைகளில் வச்சிரம், கனவாய் எல்லாம் வைத்திருக்கிறார்கள். பாண்டிச்சேரி ஒயின்ஸ் ஷாப்பில் கொடுக்கும் கனவாய்க்கு ஈடாய் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. இங்கு அதே டேஸ்டில். எறா தொக்கும் ப்ரையும் மிகச் சிறப்பு. குறிப்பாய் குண்டு குண்டாய் எறாவை போடாமல் இருந்தது மிகவும் நன்றாய் இருந்தது. 

இரவு நேரத்தில் மட்டன், சிக்கன் மற்றும் எறா தோசை வெறும் முட்டையையும், மசாலாவையும் போட்டு ஆங்காங்கே சிதறவிடப்பட்ட பீஸ்களூடன் இல்லாமல் நன்கு வெந்த பீஸ்களூடன், நல்ல தடிமனான பீஸா போல வெங்காயம் மசாலா, மற்றும் முட்டையோடு அருமையான சுவை. கூடவே கெட்டிக் குழம்பு, மட்டன் தலைக்கறி க்ரேவி, மற்றும் சிக்கன் க்ரேவியோடு, மற்றும் சட்னியும் இருக்கிறது. 

நண்டு ஆம்லெட், எறா ஆம்லெட், என விதவிதமான கடல்வாழ் உயிரினங்களை ஆம்லெட் போட்டுத் தருகிறார்கள். கிட்டத்தட்ட தோசையைப் போல இருக்கிறது. கொஞ்சம் ஆம்லெட் தனமாய் இல்லாமல் கல் தோசைப் போல இருப்பதால் அத்தனை  பாராட்டை தர முடியவில்லை. அதே போல இவர்களது ஞாயிறு ஸ்பெஷலான நாட்டுக்கோழி சீரக சம்பா பிரியாணி. சீரக சம்பா பிரியாணியின் வாசம் அருமையாய் இருந்தாலும், மசாலா அத்தனை சிறப்பாய் இல்லாததால் ரொம்பவே ப்ளண்டாக இருந்தது. குறைகளை அவர்களிடமும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நண்பர்கள் சில இங்கேயிருந்து ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு நேரிடையாய் அங்கேயே போய் சாப்பிடும் அளவுக்கு ரசிகர்களாகிவிட்டார்கள். 

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மெயின் டிஷ்ஷிலிருந்து சைட் டிஷ் வரை எல்லாமே 120-200 ரூபாக்குள் தான். நிஜமான மெஸ் தரம் மற்றும் விலையுடன். நீங்களும் டிரை பண்ணிப்பாருங்க.

வளையம்பட்டியார் மெஸ்

அக்பர் தெரு

திருவல்லிக்கேணி